ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியால் 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. ஹர்ஜித் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.. அதன்படி தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினர். இந்திய அணி நல்ல தொடக்கம் கொடுத்து நிலையில் இசான் கிஷன் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து தீபக் ஹூடா உடன் ஷ்ரேயஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்தார். 11ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தது இந்தியா.. ஷ்ரேயஸ் அதிரடியாக ஆடி வருகிறார். இந்த சூழலில் அதிரடியாக ஆடி வந்த ஹூடா 24 பந்துகளில் 38 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் வால்ஷ் பந்து வீச்சில் ப்ரூக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து மிரட்டி வந்த ஷ்ரேயஸ் ஐயரும் 13ஆவது ஓவரில் 40 பந்துகளில் 64 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.. இதையடுத்து சாம்சனும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ஆடி வந்தனர். ஆட்டத்தின் 15ஆவது ஓவரில் 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் சிறிது நேரம் மின்னல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது தொடங்கப்பட்டது. சஞ்சு சாம்சன் 15 ரன்களுடனும், பாண்டியா 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 15 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 141 ரன்களுடன் ஆடி வருகிறது..