ஸ்கூட்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் நிதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் பகுதியில் இருக்கும் பாக்ஸில் வைத்துள்ளார். அதன்பிறகு நிதிஷ் தான் நடத்தி வரும் பேன்சி கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்கூட்டரில் 2 லட்ச ரூபாயை வைத்து விட்டு மீதி பணத்தை நிதிஷ் கடைக்குள் எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் இருக்கை உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிதிஷ் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.