தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 232 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. ஒருவர் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார்.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். இதில் கொரோனா அதிகரித்து வருவதால் அது தொடர்பாகவும், பதிவேற்பு நிகழ்ச்சி தொடர்பாகவும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.