தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு பாரதிய ஜனதா, அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் மூன்று பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் 100 பேருக்கு மேல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டம் நடத்தி பேச வேண்டும் என்று தேர்தல் கமிஷன் நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவை, மதுரை, சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி ஓட்டு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மக்கள் அவருடைய பிரச்சாரத்தை காணொளி வாயிலாக பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை, மதுரை, சென்னை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. அதன்படி எடப்பாடி பழனிசாமி சென்னையில் வருகின்ற 3-ஆம் தேதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவார். அதனைத் தொடர்ந்து 6-ஆம் தேதி மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதால் அன்றைய தினம் அங்குள்ள மாநகராட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசுவார் என்று கூறப்படுகிறது.