ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 1994-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுற்றுச்சூழல் மாசு, விஷவாயு கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நான்கு முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம்
தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க, பசுமை தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அகர்வால் அறிக்கை தாக்கல் செய்ய, ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோன்று ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.