5G தொலைத் தொடர்பு சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தக் கூடிய போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. தசரா பண்டிகையையொட்டி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5G சேவையை துவங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் JIO-வின் ட்ரு 5G பீட்டாசேவை, 1 ஜிபிபி எஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5G சேவைகளைப் பெற புது சிம் தேவையில்லை எனவும் ஜியோ தெரிவித்து உள்ளது.
அதேபோன்று சென்னை, பெங்களூர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி போன்ற நகரங்களில் ஏர்டெல் 5G சேவை துவங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5G மொபைல் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், சிம்கார்டை மாற்றாமல், 4G கட்டணத்திலேயே 5ஜி சேவையை பயன்டுத்தலாம் என்று ஏர்டெல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சாம்சங் உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் 5G-ஐ ஆதரிக்கும் மென் பொருள் இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 5G தொழில் நுட்பத்திற்கான மென்பொருளை அனைத்து ஐபோன்களுக்கும் (5ஜிசேவை பொருந்தக்கூடிய போன்கள் மட்டும்) ஆப்பிள் நிறுவனம் இன்னும் புதுப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
அதன்பின் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயரதிகாரிகள் புதன்கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், விவோ, சியோமி மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் 5G அதிவேக இணையதளசேவையை மொபைல் போன்களில் அளிக்கும் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மென் பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பிட்ட 5G தொழில்நுட்பம் மொபைல் போன்களில் வழங்குவதற்குரிய மேம்படுத்தப்பட்ட மென் பொருள் அப்டேட் வெளியிடுவதற்கு காலஅவகாசம் எடுக்கும் என தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர் கூறினார்.