மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட ஐந்து பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு 305, பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் பிரிவு 75 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான ஐந்து பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.