ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் தலா ஒரு முறை வென்றுள்ளனர். அதிகளவாக அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 2011 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டதால் இடைத் தேர்தலை சந்தித்தது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வளர்மதி.
ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 3,10,739 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலமாக கோரிக்கையாகவே உள்ளது. முக்கொம்பு வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.
மணிகண்டம், அந்தநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த பூ வணிக வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. திருவானைக்காவல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே உள்ளது. அமைச்சர் வளர்மதி தொகுதி பக்கம் வருவதே அரிதாக விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. நிறைவேறாத வாக்குறுதிகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.