தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புது துணை சூப்பிரண்டாக மாயவன் பதவியேற்றுள்ளார். இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன் திருப்பூரில் பயிற்சி துணை சூப்பிரண்டாக பணியாற்றிய பிறகு தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பதவியேற்றார். அதன்பின் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது “போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது.
ஆகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் மற்றும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்துபவர் மீதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து அவர் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினார்.