ஸ்லீப் ஆப்னியா பிரச்னை குறித்து சில தகவல்களை பார்க்கலாம். அதாவது ஸ்லீப் ஆப்னியா தூங்கும் போது ஏற்படும் சுவாசப் பிரச்சனையாகும். இதை சுருக்கமாக சொன்னால் தூங்கும் போது வரும் குறட்டையாகும். இந்த குறட்டையானது ஆழ்ந்து தூங்குவதால் தான் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு. ஏனெனில் தூங்கும் போது ஏற்படும் சுவாச கோளாறுகள் தான் குறட்டையாக வெளிப்படுகிறது. இதற்கு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறாவிட்டால் மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்லீப் ஆப்னியாவின் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம். அதாவது தூக்கமின்மை, பகல் நேரத்தில் தூக்கம் மற்றும் சோர்வு, மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், காலை எழுந்தவுடன் தலைவலி வருதல் மற்றும் தொண்டை வறட்சி, தூங்கும் போது திடீரென மூச்சு திணறல் ஏற்படுதல், தூக்கத்தில் விடும் குறட்டை போன்றவைகள் ஆகும். இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மூக்கு மற்றும் தொண்டை சார்ந்த புண்கள், சுவாச பாதை பாதிப்புகள், இரைப்பை அலர்ஜி, இரவில் கண் விழித்தல், தூக்க குறைபாடு மற்றும் உடல் பருமன் போன்றவைகள் காரணமாக இருக்கிறது.
இந்த பிரச்சனையை உடல் எடையை கட்டுக்குள் வைத்து தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், துரித உணவுகளை தவிர்ப்பது, மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது, அதிக அளவில் மருந்துகள் சாப்பிடுவதை தவிர்த்தல் மற்றும் ஆரம்ப கட்ட பரிசோதனை மூலமாக சரிப்படுத்தலாம். மேலும் ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா பிரச்சனை இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை உடம்பில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்கு பாலிசோனோகிராம் முறையை பயன்படுத்துவார்கள். இதன் மூலமாக ஒருவரின் உடம்பில் ஸ்லீப் ஆப்னியா பிரச்சனை இருக்கிறதா என்பது தெரிந்து விடும்.