ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக என். ஐ. ஏ. நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக கண்டறியப்பட்ட முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் பணியாளர் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் போன்றோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு அனுமதியோடு ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் காவலில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் சென்ற 19ம் தேதி கைது செய்தனர். இதேபோல் ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பணத்தை, ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரது காவல் முடிவடைந்த நிலையில், அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1 கோடியும், 1 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் ஸ்வப்னா அதிகாரிகளின் விசாரணையால் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார். எனவே, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் ஆகஸ்டு 21ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.