Categories
மாநில செய்திகள்

ஸ்விக்கி, அமேசான் தொழிலார்களுக்கு தனி சட்டம்?…. அரசுக்கு சீமான் முக்கிய கோரிக்கை….!!!!

ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் ஆகிய இணையவழிசேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இணையவழி உணவுச் சேவை நிறுவனமான ஸ்விக்கி தம் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் ஆகும். இரவு, பகல் பாராது மக்கள் பசியைத் தீர்க்கும் ஸ்விக்கி ஊழியர்கள் உரிமைகேட்டு வீதியில் இறங்கிப் போராடி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சென்ற ஒருவார காலமாக ஸ்விக்கி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் உரிமையைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது. ஸ்விக்கி நிறுவனம் அமல்படுத்தியுள்ள புது விதிமுறைகளின்படி ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்துள்ளதோடு, அவர்களின் தினசரி மற்றும் வாராந்திர ஊக்கத்தொகையையும் முற்றாக நிறுத்தியுள்ளது. அத்துடன் மழைக்கால உதவித்தொகை மற்றும் வாகன எரிப்பொருளுக்கு வழங்கப்படும் படியும் வெகுவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர் தரக்கூடிய பாராட்டுத் தொகையைக்கூட ஸ்விக்கி நிறுவனம் முறையாக வழங்குவதில்லை என்ற ஊழியர்களின் குற்றச்சாட்டு மிகுந்த வேதனைக்குரியதாகும்.

அனைத்திற்கும் மேலாகத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலை நேர உரிமையையும் முற்றாகத் தகர்த்து, ஒரு நாளைக்கான பணிநேரத்தை 12 -16 மணி நேரங்களாக உயர்த்தி இருக்கிறது தொழிலாளர் விரோதப் போக்கின் உச்சமாகும்.  ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்து, ஊக்கத் தொகை பெறுவதற்கான சேவை எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. இதனால் அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்கே பெரும்பாடுபட்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், குண்டும் குழியுமாகவுள்ள சாலைகளிலும் அவசர அவசரமாக இருசக்கர வாகனங்களில் பயணிக்க ஸ்விக்கி நிறுவனம் அதன் ஊழியர்களை மறைமுகமாகத் தூண்டுவது, அவர்களை விபத்தில் சிக்க வழிவகுத்து உயிரோடு விளையாடும் கொடும்போக்காகும்.

புயல், மழை, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர் காலங்களிலும், கொரோனா தொற்றுக் காலங்களிலும் இரவு, பகல் பாராது பணியாற்றிய ஊழியர்களைத் துச்சமெனத் தூக்கியேறிவதும், அவர்களின் உரிமையைப் பறிப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். ஆகையால் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை வாயிலாக உடனே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்விக்கி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் ஸ்விக்கி, சொமேடோ, அமேசான், ஓலா, ஊஃபர் ஆகிய அனைத்து இணையவழிச்சேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிலையற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |