உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநில ஹத்ராஸியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அப்பெண்ணின் சடலம் இறுதி சடங்கிற்காக அவரது குடும்பத்தினரிடம் கூட கொடுக்கப்படாமல் நள்ளிரவில் போலீசாரால் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக திருமதி பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் மிகவும் மோசமாக நடத்தியதாக தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரை நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியருக்கு என்ன தொடர்பு என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூங்கி கொண்டிருக்கும் உத்திரப்பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்வுகளை கேட்டறிய வேண்டும் திருமதி பிரியங்காகாந்தி வலியுறுத்தியுள்ளார்.