பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் பிரபல தொலைக்காட்சியில் அளித்துள்ள காணொளியை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் பங்கேற்றனர். இந்த நேர்காணலானது கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்திருப்பதாக அமெரிக்க நெட்வொர்க் சிபிஎஸ் கூறியுள்ளது.
அதாவது தொலைக்காட்சி மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் வாயிலாக சுமார் 49.1 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பார்த்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஹரி மற்றும் மேகன் தம்பதி அளித்துள்ள இந்த நேர்காணலில் அரச குடும்பத்தின் இனவெறி, புறக்கணிப்பு, பகை ஆகிய குற்றச்சாட்டுகளை கூறினர்.
இந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிஎஸ் தொலைக்காட்சியிலும் திங்கட்கிழமையன்று பிரிட்டனின் ஐடிவியிலும் ஒளிபரப்பானது. மேலும் 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தின் ஆஸ்கார் விழாவிற்கு பிறகு அதிக மதிப்பிற்குரிய பொழுதுபோக்கு சிறப்பு நிகழ்ச்சி இது தான் என்று சிபிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் இந்த பேட்டி மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் சிபிஎஸ் கூறியுள்ளது.