ஹர்பஜன்சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. தற்போது இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. சேன்ட்டோ பிலிம்ஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.