ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் மிதவாதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு எதிராக சீன ஆதரவு வேட்பாளர்கள் ஏராளமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதனிடையில் ஹாங்காங் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியான நிலையில் சீன ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதுதொடர்பாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியபோது “தேர்தலில் 30.2 சதவீத வாக்குகளே பதிவான போதிலும் இது எனக்கு திருப்தி அளிக்கிறது.
கடந்த 2012, 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் பதிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை 92.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேர்தலில் வாக்களிப்பது என்பது முற்றிலும் அவர்களை சார்ந்தது” என்று கூறினார். தேர்தல் சட்ட திருத்தங்களின்படி பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 70-லிருந்து 90 ஆக உயர்த்தப்பட்டாலும், வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 35-லிருந்து 20-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் சீனாவின் ஆதிக்கம் இருக்கின்ற வகையில் ஏராளமான உறுப்பினர்கள் சீன ஆதரவு நிர்வாகத்தால் நியமிக்கப்படுவர். இத்தேர்தலை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். பெரிய கட்சியான ஜனநாயக கட்சி முதன் முறையாக இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.