கரூர் மாவட்டத்தில் உள்ள வில்லாபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் சபரி(18) என்ற மகன் உள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அரவிந்த் சபரி செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் வைத்து அவர் புகையிலை பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் உனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் அரவிந்திடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மன உளைச்சலில் கல்லூரியின் 3-வது மாடிக்கு சென்று கீழே குதித்ததால் அரவிந்த் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.