கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இஸ்லாம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹிந்து மாணவ-மாணவிகள் காவி உடை அணிந்து வந்து போராட்டத்தில் இறங்கினார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளை தளர்வு செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் இன்றியமையாததா.? என்பது குறித்து பரிசீலனை செய்கிறோம். அதுவரை நீதிமன்றத்தில் பேசப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என கூறினர். கர்நாடகாவில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளிலும் இந்த வழக்குக்கான இறுதி தீர்ப்பு வரும்வரை ஹிஜாப் அல்லது காவி துண்டு போன்ற எந்த மதம் சார்ந்த அடையாளங்களையும் மாணவர்கள் அணிந்து வரக்கூடாது என கூறினர். இதனையடுத்து இந்த வழக்குக்காண விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.