ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது பள்ளி கல்லூரிகளை சுற்றி முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போராட்டங்கள் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் துணை போலீஸ் கமிஷனர்களுக்கு கமல்பந்த் உத்தரவிட்டிருக்கிறார். பின்னர் நிருபர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர், ஹிஜாப் விவகார வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. தீர்ப்பு வெளியாவதையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருக்கிறது.
பெங்களூர் நகரம் முழுவதும் இன்று காலை முதல் வருகிற 23-ஆம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 பேருக்கு மேல் கூடுவதற்கு, போராட்டங்கள் நடத்தவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அனுமதி கிடையாது. பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை ஆயுதப்படை உள்ளிட்ட 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். பெங்களூர் நகர மக்கள் இதுவரை போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளனர். ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னும் பெங்களூர் மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.