ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு ஹிஜாப் அணிவதற்கான தடையால் பல்வேறு முஸ்லிம் மாணவிகள் கல்வியை பாதியில் கைவிட முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில உடுப்பியில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் பயிலும் மாணவி சனா கௌசர் வகுப்பறையில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார். இது குறித்து அந்த மாணவி தன் அனுபவத்தை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “எனக்கு வேறு வழியில்லை, என் கல்வி எனக்கு வேண்டும்.
நான் ஹிஜாப் அணிந்து செல்லாமல் என் வகுப்பு தோழிகளுக்கு அருகே அமர்ந்து இருந்தேன். அப்போது இந்து மாணவி ஒருவர் தன்னிடம் வந்து நீங்களும் எங்களில் ஒருவர்தான் என தெரிவித்தார். வகுப்பு அறையில் ஹிஜாப் அணியகூடாது எனும் நீதிமன்றம் உத்தரவால் பல்வேறு மாணவிகள் படிப்பைகைவிட முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் 5 (அல்லது) 6 இறுதியாண்டு மாணவிகள் டிரான்ஸ்பர் சர்டிபிகேட் கேட்டதாக கேள்விப்பட்டேன்.
பல மாணவிகள் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். ஹிஜாப்பை கைவிடுவதற்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவிகள் தொடர்பாக உடுப்பி பெண் அரசு கல்லூரியின் துணை தலைவர் யஷ்பால் சுவர்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அவர்கள் மாணவிகள் அல்ல, பயங்கரவாத அமைப்பின் முகவர்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய நீதித் துறையை மதிக்கவில்லை என்றால், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம். ஆகவே ஹிஜாப் அணிய அனுமதி கொடுக்கும் பகுதியில் அந்த மாணவிகள் குடியேறலாம் என்று அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.