பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான லகான் மத்திய அரசிடமே உள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் சாடியுள்ளார்.
ஸ்டைல் பஸார் என்னும் அமைப்பு சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய அளவிலான ஆடை கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவது. விலை குறைப்பிற்கான லகான் மத்திய அரசின் கையில் உள்ளது.
ஆனாலும் தொடர்ந்து ஹிட்லர் வாரிசு போல விலைக்குறைப்பு தொடர்பாக அவர்கள் பொய் கூறி வருகின்றனர். ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது பெரும் கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியின் பெருமை, திருவள்ளுவர், தமிழ் புலவர்கள் குறித்து பிரதமர் பேசுவது வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருக்கக்கூடாது. இதற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். மேலும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் கொடுப்பேன்.
பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தடுப்பதற்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும். இந்த பிரச்சினைகளில் ஆணி வேறாக பெண் குழந்தைகளை எவ்வாறு பார்க்கவேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். மேலும் இந்தியாவிலேயே பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும், புகார் அளிக்கும் பெண்களின் விவரத்தை பொதுவில் தெரியாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விதிகளும் நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.