லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹிந்துத்துவம் தலைவர் சாவித்ரி ரிதம்பரா பேசியதாவது, தில்லியில் உள்ள இடங்களில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த ஊர்வலத்தின் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசியல் நடத்துபவர்களை புறந்தள்ள வேண்டும். மேலும் ஹிந்துக்கள் இப்போது பெரும்பாலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது கிடையாது.
ஆனால் ஹிந்து தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதில் இரண்டு குழந்தைகளை நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும். இரண்டு குழந்தைகளை குடும்பத்திற்காக வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவானால் விரைவில் ஹிந்து தேசம் மலரும். அதிலும் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து செல்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தினால் மக்களிடையே பாகுபாட்டினை அகற்ற முடியும் என கூறியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்க வேண்டும் என கூறுகிறீர்களா? என்று பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆம் ஆர்எஸ்எஸ், விஹெச்பி அமைப்பில் இணைந்து செயல்படுவதன் மூலமாக நாட்டிற்கு தொண்டாற்ற முடியும் என அவர் பதிலளித்துள்ளார். சாவித்திரி ரிதம்பரா விஹெச்பி அமைப்பின் மகளிர் பிரிவான துர்கா வாஹினி அமைப்பை நிறுவியவர் என்பதும் ராம ஜென்மபூமி அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.