பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 85,50,000 ரூபாய் நிவாரண நிதி சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வேளாண் பயிர்களான நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, கரும்பு, தென்னை ஆகியவை 109.88 ஹெக்டரும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், தக்காளி மற்றும் பல்லாண்டு பயிரான முருங்கை, காய்கறி வகைகள், பாக்கு மரம் ஆகியவை 599.6 ஹெக்டர் அளவிலும் மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் சுமார் 1,736 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இதனையடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஹெக்டருக்கு 13,500 ரூபாயும், கூடுதல் மாநில நிதியிலிருந்து 6,500 ரூபாய் என மொத்தம் ஒரு ஹெக்டருக்கு 20,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல் பல்லாண்டு பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஹெக்டருக்கு 18,000 ரூபாயும், கூடுதல் மாநில நிதியிலிருந்து 7,000 ரூபாயும் என மொத்தம் 25,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு மதிவேந்தன் முன்னிலையில் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சுமார் 916 விவசாயிகளுக்கு 85,50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கிய நிலையில், வேளாண் இணை இயக்குனர் அசோகன், தோட்டக்கலை துறை இயக்குனர் கணேசன், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.