ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் போடாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கடந்த 18-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்படாது என கூறியிருந்தார். அதன்படி தான்தோன்றிமலை, சுங்ககேட், ஜவகர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் சார்பில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரூரில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்படுகிறது. அதில் ஹெல்மெட் அணியாமல் மற்றும் சீட் பெல்ட் போடாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என குறிப்பிடப்பட்டிருந்தது.