நாடு முழுவதும் மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது மாறுபடுகிறது. அதன்படி கேரளாவில் இதுவரை 56 வயது தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் மற்ற சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநில அரசு அந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. அவருடைய ஆட்சியில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அதிரடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2011-2016-ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த உம்மன் சண்டி என்பவர் அரசு ஊழியர்களுடைய ஓய்வு பெறும் வயதை 56-ஆக உயர்த்தினார். ஆனால் அதன் பிறகு இதுவரை ஓய்வுபெறும் வயதை யாரும் உயர்த்தவில்லை. எனவே கேரள மாநில அரசு, தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56-ல் இருந்து 57-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுகுறித்த அறிவிப்பானது நிதியமைச்சர் K.N பாலகோபால் அவர்களால் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 4 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். எனவே இவர்கள் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான உத்தரவு அமலுக்கு வரும் போது அதனை எதிர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.