தஞ்சாவூரில் 44 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் முக ஸ்டாலின் 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக 1.06 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். 48 வருடங்களுக்கு பிறகு தற்போது 1.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பது தமிழகத்தில் இந்த ஆறு மாத காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டுவது அவசியம். அதற்கு பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம்.
நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பட்டியல் எழுத்தருக்கு 5,285 ரூபாயாகவும், உதவியாளர்களுக்கு 5,218 ரூபாயாகவும் ஊதியத்தை உயர்த்தி, அகவிலைப்படி 3,499 ரூபாய் சேர்த்து வழங்கப்படும். சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு, 3.25 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக, கூடுதலாக 83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.