உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, சிறுகாவேரிப்பாக்கம் ரேஷன்கடை, தாமல் மற்றும் விஷார் நெல் கொள்முதல் நிலையங்கள், கீழம்பி ரேஷன் கடை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளுக்கு தரமான பொருள்கள் அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்த பிறகு பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அனுப்பி வைக்கப்படும் அரசி தரமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
எனவே மாவட்ட வழங்கல் அலுவலர் ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசியை அனுப்பும் பணியை முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்த வேண்டும். ரூ.96 கோடி செலவில் 286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள் புனரமைப்பு செய்யப்படும். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 11 மாதங்களிலேயே புதிய ரேஷன் கார்டுகள் 11 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 31 லட்சம் டன் நெல், நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.