ஆன்லைன் மூலமாக லைசன்ஸ் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் (போக்குவரத்து) துறை சார்பில் ஏப்ரல் 12 (இன்று) தலைமைச் செயலகத்தில் வைத்து பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் அதனை புதுப்பித்தல், மேலும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் செய்யும் வசதியை தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான உள்(போக்குவரத்து) துறை மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் நேரில் வராமலேயே, நேரடி தொடர்பு இல்லாத போக்குவரத்து சேவைகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் அதனை புதுப்பித்தல், மேலும் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்றுதல் ஆகியவற்றினை www.parivahan.gov.in என்ற இணையதளம் மூலம் பெறும் வசதியை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதனால் மக்களுக்கு வழங்கப்படும் சேவை மிகவும் எளிமையாகவும் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன், மேலும் விரைவாக செயல்படுத்த படுவதோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வர வேண்டிய சிரமமும் குறைய வாய்ப்புள்ளது.