இன்று சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் தமிழகத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூபாய் 2.10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகள் பின்வருமாறு.
நடப்பு நிதி ஆண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள 2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
நகர்ப்புறத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் விதமாக இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும்.
மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சேதமடைந்த 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும்.
பயனாளிகளின் திறன் மற்றும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் விதமாக பல்வேறு தரைபரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.