தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற மார்ச் 12 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் ராணிப்பேட்டையை பிரித்து, தனி மாவட்டமாக உருவானது. இங்கு 330 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12-ஆம் தேதி நடத்துகிறது.
இந்த முகாமானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில், லாலாப்பேட்டை என்ற பகுதியில் உள்ள ஜி.கே.வேல்டு பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளன.
மேலும் 5-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதி உடையவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைகளை தேர்வு செய்யலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாஸ்போர்ட் போட்டோ, பயோடேட்டா மற்றும் அனைத்து கல்வி பயின்ற சான்றிதழுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.