ஹைதராபாத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர் ரஜினிக்கு தொற்று இல்லை என அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடிகர் ரஜினிக்கு மேலும் ஒரு கொரோனா பரிசோதனை இன்று மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இந்தப் பரிசோதனையின் முடிவினை பொறுத்து நாளை மறுநாள் ஹைதராபாத்தில் இருந்து நடிகர் ரஜினி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது .