Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கெட்டுப்போன மீன் குழம்பு…. “10 பேருக்கு ஒரே வாந்தி, மயக்கம்”…. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி…!!

கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி  இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அப்போது காலாவதியான மீன்குழம்பு சாப்பிட்டதால் தான் சுற்றுலா பயணிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உணவு பாதுகாப்புத் துறையினரிடம் நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்துள்ளனர்.

இப்புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமையிலான குழுவினர் அந்த ஹோட்டலுக்கு வந்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மதிய உணவு தயாரிப்பதற்கு கெட்டுப்போன இறைச்சிகள் இருந்தது தெரியவந்தது. மேலும் 10 கிலோ கோழி இறைச்சி, மீன்கள், வண்ணம் ஏற்றப்பட்ட இறைச்சி, காலாவதியான பருப்பு வகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்புத் துறையினர் ஹோட்டலில் உணவு சமைக்கும் அறையை ஆய்வு செய்தபோது அந்த சமையலறை சுத்தம் இல்லாமல் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் அந்த ஓட்டலின் உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபதாரமும்,ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து அந்த உணவு விடுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உடல்தகுதி, தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழ் சரிபார்த்த பின்பு தான் ஹோட்டல் திறக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதே மாதிரி கொடைக்கானல் கே. ஆர். ஆர். கலையரங்கம் பகுதியில் இருக்கின்ற இறைச்சி, டீக்கடைகள், தனியார் உணவு விடுதிகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்டித்து கடை உரிமையாளருக்கு ரூபாய் 2000 அபதாரம் விதித்தனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் எச்சரித்தார்.

Categories

Tech |