கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதனை பிரித்த மகன் ஆகாஷ் (8), மகள் லோசனா (10) ஒரு பார்சல் லெமன் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். குழந்தைகள் மீதி வைத்த சாப்பாட்டை சிவபாலன் சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கணவருக்கு இன்னும் சாப்பாடு கொடுப்பதற்காக கலைவாணி இன்னொரு பார்சலை பிரித்துள்ளார். அதில் வள்ளி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் மயங்கி விழுந்தன. குழந்தைகளை மீட்ட பெற்றோர் உடனே அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து சிவபாலனுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உணவகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.