ஹோட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் ஏற்காட்டில் தனக்கு சொந்தமாக இருக்கும் ஹோட்டலை விற்பனை செய்வதாக ஜெகதீஷ் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு ஹோட்டலை விலைக்கு வாங்க விரும்புகிறேன். அதற்காக பாதி தொகையை முன் பணமாக கொடுக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் முன்பணம் தருவதற்கு முன்னால் பதிவுத்தொகையாக 73,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெகதீஷ் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து 20 ஆயிரம் ரூபாயை மீட்டனர். மீதமுள்ள பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.