திருச்செங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் குணா அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை குணா தாய் லட்சுமியிடம் ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின் நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் லட்சுமி அக்கம் பக்கதினரிடம் விசாரித்தார்.
பின்னர் அங்கிருக்கும் பொய்யேரி பலத்த மழை காரணமாக நிரம்பி உபரிநீர் வாய்க்கால் வழியாக வெளியேறுவதால் குணா தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்து லட்சுமி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது குணா வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. இதைப் பார்த்த தாய் லட்சுமி கதறி கதறி அழுதார். பின் இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸ்சார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.