நாடு முழுவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை 10 ஆய்வகங்களில் நடைபெறுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 சதவீத மாதிரிகளை அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வைரசின் தன்மை குறித்தும், பரவும் விகிதம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வுகள், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனேவில் இரு ஆய்வகங்களிலும், கொல்கத்தா மற்றும் புவனேஸ்வரில் தலா ஒரு ஆய்வகத்திலும் நடைபெறுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வகங்களில் புதிய வகை கொரோனா வைரசின் மரபணு வரிசை குறித்து ஆய்வு செய்வதோடு, வைரஸ் பரவும் விதம், அறிகுறிகள், சங்கிலித் தொற்றை உடைக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளில், 5 சதவீத மாதிரிகளை அனுப்பி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.