புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 7-ம் கட்டப் பேச்சுவார்த்தையில், மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் உணவு அமைச்சர் திரு. பியூஷ் கோயல், வர்த்தகத் துறை இணை அமைச்சர் திரு. சோம் பிரகாஷ் ஆகியோர் 41 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டெல்லி போராட்டத்தின் போது, கடும் குளிர், விபத்து, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த விவசாயிகளுக்கு, இக்கூட்டத்தின் தொடக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில், விவசாயிகள் உறுதியாக உள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்காததால், இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்திற்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற, விவசாயிகளின் மற்றொரு பிரதான கோரிக்கையிலும் இருதரப்பினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
நேற்றைய பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர, வேறு எதைப்பற்றியும் தாங்கள் விவாதிக்க விரும்பவில்லை எனவும், இச்சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும், அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர் திரு.ஹனான் மொல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.