“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று தேனியில் பேசிய முக.ஸ்டாலின், ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்ம மரணத்தை கண்டுபிடிக்க நீதி விசாரணை தேவை” என்று சொன்னார். இதெல்லாம் நீங்கள் பார்த்த செய்தி தான் நான் தவறாக சொல்லவில்லை.
நீதி விசாரணை கேட்டது நாங்கள் அல்ல. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்கள் அல்ல. தி.மு.க.காரர்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் சொன்னார். அதன்பின் அவரை சமாதானம் செய்து. துணை முதலமைச்சராக பதவி கொடுத்து, நீதிவிசாரணை வைக்கிறோம் என்று சொல்லி முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் நீதிவிசாரணை அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் உண்மை வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை 8 முறை ஆஜராக அழைத்தார்கள். ஒருமுறை கூட அவர் செல்லவில்லை. இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அம்மா படத்தை மேசையில் வைத்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சாதாரணமாக ஒருவர் இறந்தாலே நாம் அவருக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கிறோம். ஆனால் இறந்தது யார் சாதாரண ஒருவரா? கொள்கை ரீதியாக, இலட்சிய அடிப்படையில் நாம் எதிர்க்கட்சி தான். இருப்பினும் அவர் நமக்கும் சேர்த்து தான் முதலமைச்சர். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்தது பற்றிய உண்மை இன்னும் வெளிவரவில்லை. இப்போது சொல்கிறேன், இந்த 4 மாதம் தான் அவர்கள் ஆட்சி இருக்கப்போகிறது.
4 மாதத்திற்குப் பிறகு நாம் தான் ஆட்சியில் அமரப் போகிறோம். அதன் பிறகு இதைக் கண்டுபிடித்து விசாரணை கமிஷனை முறையாக நடத்தி, நிச்சயமாக, உறுதியாக குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பது தான் தி.மு.க.வின் நோக்கம். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான்.