தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் இரவு நேரத்தில் டோக்கன்கள் கொண்டு வரும் பெண்களுக்கு பட்டு சேலை மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சிகளில் அதிமுகவினர் கோல போட்டி நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பெண்களுக்கு பட்டு சேலை மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று இலவசமாக சில்வர் தட்டு, வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினர். அப்போது அங்கு வந்து எதிர்க்கட்சியினர் செல்போனில் இவற்றை படம் எடுத்ததால் அதிமுகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்று வீடுகளில் அதிமுகவினர் பரிசு பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் புகார் அளித்தனர் . அதன் பேரில் அங்கு வந்து அதிகாரிகள் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வீடுகளுக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்துள்ள பரிசு பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அகற்றாமல் இருந்து அதிமுக விளம்பரப் பலகைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அகற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.