கோவில் நிதியில் தற்போது துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலம் முழுவதும் 10 கோவில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 4 கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதி இன்றியும் துவங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் 4 கல்லூரிகளில் இந்துமத வகுப்புகள் தொடங்க வேண்டும் எனவும், கல்லூரி தொடங்கிய 1 மாதத்திற்குள் மத வகுப்புகள் நடத்த வில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.