அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு நேற்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அங்கு அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அதிமுக கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டு தான் தற்போது அதிமுகவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த கல்வெட்டில் “கழக பொதுச் செயலாளர் சசிகலா” என்று பொறிக்கப்பட்டிருந்தது தான் சர்ச்சைக்கு காரணம்.
இதனையடுத்து எடப்பாடி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும், கட்சியிலேயே சசிகலா இல்லாதபோது பொதுச்செயலாளர் என்று எப்படி சொல்ல முடியும் எனவும் கூறி வருகின்றனர். செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவி சண்முகம், நிஜமான தலைவர்களாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. நிழல் என்ன செய்ய முடியும். ஒரு சசிகலா இல்லை ஆயிரம் சசிகலா வந்தாலும் என்ன நாடகம் நடத்தினாலும் அதிமுகவை ஒன்றும் அசைக்கவே முடியாது என்று கடுமையாக பேசியுள்ளார்.