நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் ஜாக்குலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி ஜாக்குலின் எம்.கே.பி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு எதிரே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி புதிய கடவுச்சொல்லை போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பின்னால் நின்ற 40 வயது மதிக்கத்தக்க நபரிடம் உதவி கேட்டுள்ளார்.
அந்த நபர் ஜாக்குலினிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி புதிய கடவுச்சொல்லை தயார் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் ஏ.டி.எம் கார்டை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற ஜாக்குலினின் செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாக்குலின் தன்னிடம் இருப்பது போலியான ஏடிஎம் கார்டு என்பதை அறிந்தார். இதுகுறித்து ஜாக்குலின் அடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பெரம்பூர் பாரதி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு(55) என்பவரை கைது செய்தனர்.
இவர் மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் பேக்டரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது 271 போலி மற்றும் ஒரிஜினல் ஏடிஎம் கார்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிரபுவிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கத் தெரியாமல் சிரமப்படும் முதியவர்களுக்கு பிரபு உதவி செய்வது போல நடித்து ஒரிஜினல் ஏ.டி.எம் கார்டை வாங்கியுள்ளார். பின்னர் போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் பிரபு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.