மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் (எ) ரேணு ராஜ்புத்(28) என்ற பெண் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுமாக இருந்துள்ளார். இவர் ராஜஸ்தானில் கோட்டா, ஜெய்ப்பூர் மத்திய பிரதேசத்தில் தாமோ, சாகர் போன்ற இடங்களிலும் இதுபோன்று ஏமாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற வாலிபரை 8-வது முறையாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து ஊர்மிளா அந்த நபரிடம் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஊர்மிளா ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம்போல் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் ஊர்மிளாவை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங் போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார். அதன்பின் விசாரணையில் 8 ஆண்களை ஏமாற்றியதை ஊர்மிளா ஒப்புக்கொண்டார்.