Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 இல்ல… 2 ஓட்டு…. திமுக வேட்பாளரால்…. “அதிர்ச்சியடைந்த வாக்காளர் “… கொந்தளித்த பிற கட்சிகள்..!!

நேற்று  நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர் 2 ஓட்டுகளை பதிவு செய்தது  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட  56  ஆவது  வார்டு  பெண்கள் பொது  பிரிவுக்கு   ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த  56  ஆவது  வார்டில் பாலசுப்பிரமணியன் என்பவரது  மனைவி  (41)   மஞ்சுளாதேவி  என்பவர் கருமண்டபம் பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  மேலும் வார்டில்    அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் , பா.ஜனதா,  தே.மு.தி.க.,  வேட்பாளர்கள்   மற்றும்   சுயேச்சை வேட்பாளர்  இருவர்  போட்டியிட்டனர்.

இதில்  வேட்பாளர்  விவரம்  வருமாறு, அ.தி.மு.க. – வி.ராஜலட்சுமி,  நாம் தமிழர் கட்சி – பாண்டி மீனா,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – சவுந்தர்யா,  பா.ஜனதா – சத்தியகலா, தே.மு.தி.க. – சர்மிளா மற்றும் சுயேச்சைகளாக கவிதா பெருமாள், யோகலட்சுமி  ஆகிய   8  பேர்  போட்டியிட்டனர்.   நேற்று 56-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில்  காலை முதல்    விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு  நடைபெற்றது.

இதையடுத்து  கருமண்டபம் கலிங்கப்பட்டி புதுத்தெருவில்   வசித்து  வரும் சுப்பிரமணியன் என்பவரின்  மனைவி முத்துலெட்சுமி. 54  வயதான   இவர்  நேற்று  கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள  647 ஆவது  வாக்குச்சாவடிக்கு  காலை 9 மணிக்கு வாக்களிக்க    சென்றார். வாக்காளர் பட்டியலில் முத்துலெட்சுமி என்ற பெயரில் ஏற்கனவே  வாக்கு பதிவாகி  இருக்கிறது என்று வாக்குச்சாவடி  அலுவலர் கூறினார்.

இதை கேட்டு  அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, நான்  இப்போது  தான் ஓட்டுப்போட வருகிறேன் என்றும்,  எனது ஓட்டை யார்  பதிவு செய்தார்  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்  என்றார். இதையடுத்து  ஆவண பதிவேட்டில்  வாக்குச்சாவடி  அலுவலர்கள்  ஆய்வு செய்தனர்.  இந்த  ஆய்வு  மேற்கொண்டதில், 56  ஆவது  வார்டில் போட்டியிடும்  தி.மு.க. பெண்வேட்பாளர் மஞ்சுளாதேவி   2 ஓட்டுகள் போட்டது  தெரியவந்தது.  அதாவது  மஞ்சுளாதேவி  அதே பள்ளி மையத்தில் அமைந்துள்ள  646 ஆவது  வாக்குச்சாவடியில் தனது ஓட்டை காலை 7.10 மணியளவில் போட்டுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்   மஞ்சுளாதேவி முத்துலெட்சுமி  என்பவரின்  வாக்கினை  தன்  பெயரிலே பதிவு செய்ததால் சிக்கி  இருக்கிறார்.  இந்த  சம்பவம்  அறிந்து  வந்த  பிற கட்சி   வேட்பாளர்கள் வாக்குச்சாவடியில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  சம்பவம்   அப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தியது. இது  குறித்து  கேள்விப்பட்ட   அபிஷேகபுரம்  கோட்ட அ.தி.மு.க. முன்னாள் தலைவர் ஞானசேகர்  மற்றும்  கருமண்டபம் ஊர்த்தலைவர்  ஜெயபால்  ஆகியோர்   திருச்சி-திண்டுக்கல் சாலையில்  கோஷம்   எழுப்பி  திரண்டு போராட்டம்  நடத்தினர்.  அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக  இங்கு வர வேண்டும் என்றும்,  இரட்டை வாக்குகள்  எப்படி  பதிவானது  என்று  கேள்வி கேட்டனர்.   மேலும்  வாக்குச்சாவடி அலுவலர்கள்  துணை  போய்  உள்ளார்கள்  என சத்தமிட்டனர்.

இவர்களுடன் ஓட்டுப்போடும் வாய்ப்பை இழந்த வாக்காளரான முத்துலெட்சுமியும் சேர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டார்.  அதற்கு  பிறகு  தேர்தல் நடத்தும் அலுவலரான கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் செல்வபாலாஜி  மற்றும்  போலீசார்   விரைந்து  வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளிடம் தனித்தனியாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்த  பின்பு,  2 ஓட்டுகள் போட்ட தி.மு.க. வேட்பாளர் மஞ்சுளாதேவியை தகுதி நீக்கம் வேண்டும்  என்றும்,  அவர்  மீது  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்.

மேலும்  வாக்கு  பறிபோன முத்துலெட்சுமி  என்பவருக்கு  தனியாக  வாக்கு  சீட்டு   பதிவு  செய்யும்  “டெண்டர்”  முறையில்  அதிகாரிகள்  ஒட்டு  போட  ஏற்பாடு  செய்தனர்.  அதன்  பின்  அவர்  ஒட்டு  போட்டு விட்டு  சென்றுவிட்டார்.

 

Categories

Tech |