தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் திமுக- அதிமுக பாமக மகளிர் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும், உள்ளூரில் செல்வாக்கு படைத்தவர்களும் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மூன்று அடுக்கு பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது. போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுகவானது 120க்கும் அதிகமான இடங்களில் வெற்றி வாகை சூடி உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளானது 800க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜானகி ராமனை விட 170 வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜானகிராமனுக்கு தேர்தலில் ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பதாகும்.
இதனால் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து அவர் கூறியதாவது, “தேர்தல் வேலையில் நான் மிகவும் பிசியாக இருந்ததன் காரணமாக எனக்கு ஓட்டு போட மறந்துவிட்டது” என்று கூறியுள்ளார். இதில் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால் இவரது குடும்பத்தினரும் கூட இவருக்கு ஓட்டுப் போடவில்லை என்பதுதான்.