தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் செல்லப்பன். இவர் துபாயில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். செல்லப்பனிடம் அருண் பிரசாத் நபர் அறிமுகமாகி என்னிடம் உள்ள ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தால் உனக்கு ஒரு லட்சம் கமிஷன் தருவதாக அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்லப்பன் ஒரு கிலோ தங்க கட்டிகளை தனது ஆசனவாயில் பதுக்கி வைத்து விமானத்தில் கடத்தி வந்துள்ளார்.
அப்போது திடீரென வலி ஏற்பட்டு ரத்தம் வர இவருடன் பயணம் செய்த கேரளத்தில் வசித்து வரும் அனிஷ் குமாரிடம் தங்க கட்டியை ஒப்படைத்துவிட்டு செல்லப்பன் சென்னை விமானத்தில் இறங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் செல்லப்பனிடம் தங்கத்தை எங்கே என்று விசாரிக்க அவர் விபரத்தைக் கூறவும் அனிஷ் குமாரை கண்டுபிடிக்க கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்லப்பனை அழைத்துச்சென்று தேடியுள்ளனர். எங்கும் தேடியும் அனீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாமல் போனதால் செல்லப்பனை சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள விடுதியில் சுமார் 45 நாட்களாக அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
அப்போது திடீரென செல்லப்பன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால்,அவரை கடத்தி வந்த கும்பல் பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் வடக்கு கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு செல்லப்பனை கடத்திய கும்பலை சேர்ந்த முகமது இந்தியாஸ் (27) என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.