Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 கோடி ரூபாய் வாங்கி தரேன்…. மோசடி செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆன்லைனில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தா நகரில் லாரி வொர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர், தான் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் ரூ.1 கோடி வரை ஆன்லைன் மூலம் கடன் உதவி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். முதலில் தனக்கு கடன் உதவி எதுவும் தேவையில்லை என்று தமிழரசு சந்தோஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக சந்தோஷ் தமிழரசை வற்புறுத்தியுள்ளார். அதனை நம்பி தமிழரசு சந்தோஷிடம் ஆன்லைன் கடனுதவி பற்றி கூடுதல் தகவல் கேட்டு தெரிந்துகொண்டார்.

அதன்பின் சந்தோஷ் தமிழரசிடம் ரூ.1 கோடி வரை குறைந்த வட்டியில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்றுத்தர தனக்கு 30 லட்சம் செயலாக்க கட்டணமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் தமிழரசும் அவர் கூறிய அனைத்தையும் நம்பி பல்வேறு கட்டங்களாக ரூபாய் 22 லட்சத்து 81 ஆயிரம் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் செலுத்தி பல மாதங்கள் ஆன பிறகும் கடன் உதவி எதுவும் வழங்கப்படாததால் தமிழரசு சந்தோசை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் சந்தோஷின் கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழரசு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் கடனுதவி மற்றும் வங்கி விபரங்கள் குறித்து யாராவது கேட்டால் உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்த பின்னரே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |