1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பொருள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி வர, இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் தமிழகத்தில் படிக்க வருவதற்கான காரணமாக, சத்துணவு திட்டம் அமைந்தது. பெரும்பாலான குடும்பத்தில் மாணவர்களுக்கு நிறைவான சாப்பாடு என்பது அந்த சத்துணவு திட்டத்தில் தான் கிடைத்தது. தற்போது ஊரடங்கால் சத்துணவு திட்டத்தால் பயன் அடைய முடியாத மாணவர்களுக்கு உதவும் வகையில் சமீப காலமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில் மே மாதத்திற்கான சத்துணவு திட்டத்தில் பயன்பெறாத மாணவர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக, மே மாதத்திற்கான உணவுப் பொருட்களை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை சத்துணவு திட்டத்தில் பயன்பெற்று வந்த மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பாக மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த முடிவை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட கல்வி துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.