தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ சாக்ஸ் வழங்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கியது போல், ஷூ சாக்ஸ் வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பிறகே நிறைவேற்றப்படும். ஆனால் பயிர்க் கடன் தள்ளுபடி தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு விரைவில் நல்ல தகவல் வரும்” என்று அவர் கூறியுள்ளார்.