பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மேட்டூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கவியரசன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் என்பதால் 2 ரூபாயை கண்டக்டர் அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, 1 ரூபாயை இறங்கும்போது தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த வாலிபர் கவியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தம் வந்ததும் அந்த வாலிபர் பேருந்தை விட்டு கீழே இறங்கினார். இதனையடுத்து வாலிபர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து கவியரசன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் சின்னமுழியனூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்துள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.